முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2024-09-15 07:26 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.

இருப்பினும், அதற்கு முன்பே ஜூன் 26-ந்தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும் என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.

அமலாக்கத்துறை ஜாமீன் அளித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாத பட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள்ளேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன்.

ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சலையும் உடைப்பதுதான் அவர்களின் லட்சியமாக இருந்தது. அதனால் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் நம்முடைய கட்சி உடையவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் சிறையிலிருந்தபோது, ராஜினாமா செய்யவில்லை. நான் அவர்களின் பார்முலாவை தோல்வியடையச் செய்ய விரும்பினேன்.

ஒரு அரசை ஏன் சிறையில் இருந்து இயக்க முடியாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டது. சிறையில் இருந்தும் ஒரு அரசு இயங்க முடியும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்