மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு: காரணம் என்ன..?

மன வருத்தத்தில் அவையில் இருந்து வெளியேறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

Update: 2024-08-08 07:50 GMT

புதுடெல்லி,

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளின்போது பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கப் பிரச்சினையை எழுப்ப எழுந்து நின்றார்.

ஆனால் இந்தப் பிரச்னையை எழுப்ப கார்கேவுக்கு, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சில பிரச்சினைகளை எழுப்ப எழுந்து நின்றார், ஆனால் அவைத் தலைவர் அவருக்கும் அனுமதி அளிக்கவில்லை.

பின்னர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தை விவாதத்திற்கு ஏற்க மறுத்ததால் மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர். மீண்டும் அவைக்குள் வந்த எதிர்க்கட்சியினர் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தை குறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய ஜெகதீப் தங்கர், சில நேரமாக நான் இங்கு உட்காரும் நிலையில் இல்லை என்றும், கனத்த இதயத்துடன் தான் அவையை விட்டு வெளியேறுவதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து பூஜிய நேரத்திற்கு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமை வகித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்