சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி

சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்த சம்பவத்தில் பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்டுள்ளார்.

Update: 2024-08-30 06:52 GMT

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பைக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதன்பிறகு  பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்

Live Updates
2024-08-30 10:44 GMT

சத்ரபதி சிவாஜி சிலை சேதம்: மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் கடற்கரை ராஜ்காட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர பிரமாண்ட சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடற்படை தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி திறந்துவைத்தார்.

கம்பீரமாக காட்சியளித்த இந்த சிலை திறந்து வைக்கப்பட்ட 9 மாதங்களில் இடிந்து விழுந்தது. கடந்த 26ம் தேதி சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது சிவாஜி சிலை இடிந்து விழுந்தது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்து கிடந்த காட்சி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவம் மராட்டிய அரசியலில் புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் மராட்டியத்தில் பாஜக அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பால்கர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்ததற்க்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

நமது மதிப்புகள் மாறுபட்டவை. எங்களை பொறுத்தவரை கடவுளைவிட பெரியது எதுவுமல்ல. சிலர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வந்தனர். ஆனால், அவமதித்ததற்கு மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.

சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. மால்வானில் நடந்த சம்பவம் தொடர்பாக (சிவாஜி சிலை சேதம்) எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் தலைவணங்கி மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். சிவாஜி சிலை சேதமடைந்த சம்பவத்தால் வேதனையடைந்துள்ள மக்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

2024-08-30 10:22 GMT

பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று மராட்டியம் சென்றுள்ளார். அங்கு அவர் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற குளோபல் பிண்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின்னர், பால்கர் மாவட்டத்தில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பால்கர் மாவட்டத்தில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள வாதவான் துறைமுக திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால்கர் மாவட்டத்தில் அமைய உள்ள மீன்வளத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.   

2024-08-30 08:07 GMT

செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு தொடர்பான உங்கள் கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். அதனால்தான் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு நெறிமுறைக்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பின்டெக் துறைக்கு உதவும் வகையில் கொள்கை அளவில் தேவையான அனைத்து மாற்றங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். 

2024-08-30 08:03 GMT

ஜன்தன் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 10 கோடி கிராமப்புறப் பெண்கள் பலனை பெறுகின்றனர். ஜன்தன் திட்டம் பெண்களின் நிதி மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

2024-08-30 07:49 GMT

ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குளோபல் பின்டெக் பெஸ்ட் -2024 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் பின்டெக் புரட்சியானது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதோடு, புதுமையையும் மேம்படுத்துகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் எப்படி வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளோம் என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

விமான நிலையத்தில் வந்து இறங்குவதிலிருந்து சாலையோரக் கடைகளில் உணவு பொருட்களை ருசிப்பது வரை இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப புரட்சியை எல்லா இடங்களிலும் காணலாம்.

முன்பெல்லாம் நாட்டில் போதிய அளவில் வங்கிக் கிளைகள் இல்லை என்றும், கிராமப்புறங்களில் இணைய சேவை கிடைப்பது இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதை நினைவுகூர்ந்த அவர்,

நிதி தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக 6 கோடியாக இருந்த பிராட்பேண்ட் பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 94 கோடியாக அதிகரித்திருத்துள்ளது.

2024-08-30 07:15 GMT

மும்பையில் உள்ள குளோபல் பின்டெக் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்