ஐகோர்ட்டு நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதுடெல்லி,
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சேகர் யாதவ் சமீபத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், பெரும்பான்மையினருக்கு ஆதரவான சட்டம் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். இது எதிர்க்கட்சியினர் மற்றும் சிறுபான்மையினரிடையே பெரும் கொந்தளிப்யை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சை வெறுப்பு பேச்சாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளன.
இதற்காக 50 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அவர்கள், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வக்கீலுமான கபில்சிபல் கூறுகையில், 'இதுபோன்ற கருத்துகளை வெளியிடும் எந்த நீதிபதியும் தனது பதவியேற்பு உறுதிமொழியை மீறுகிறார். பதவிப்பிரமாணத்தை மீறுவோர் தனது பதவியில் இருக்க உரிமை இல்லை' என்று தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு பெறவேண்டும். அதன் பிறகு ஜனாதிபதி உத்தரவின் பேரிலேயே பதவி நீக்க முடியும்.