அருணாசல பிரதேச முதல்-மந்திரியாக 3வது முறை பதவியேற்றார் பிமா காண்டு
அருணாசல பிரதேச முதல்-மந்திரியாக பிமா காண்டு இன்று பதவியேற்று கொண்டார்.;
இட்டாநகர்,
அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பிமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் 3வது முறை ஆட்சி அமைக்கிறது. நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பிமா காண்டு மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பிமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல்-மந்திரி ஆகிறார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை நேற்று பிமா காண்டு சந்தித்தார். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, தலைநகர் இடாநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 3வது முறை முதல்-மந்திரியாக பிமா காண்டு இன்று பதவியேற்றுக்கொண்டார். பிமா காண்டுக்கு கவர்னர் கே.டி. பர்நாயக் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி ஜே.பி. நட்டா, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் மற்றும் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.