ஊசி போட்ட நர்சிடம் படுக்கையில் கிடந்த நோயாளி பாலியல் சீண்டல்... மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்
மேற்கு வங்காளத்தில் நர்சிடம் நோயாளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால், பணியை நிறுத்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என டாக்டர் கூறியுள்ளார்.;
பீர்பும்,
மேற்கு வங்காளத்தில் பீர்பும் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில் நோயாளி ஒருவர் கடும் காய்ச்சல் பாதிப்பால் ஸ்டிரெச்சரில் வைத்து நேற்று இரவு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
அவர் உடல்நலம் மோசமடைந்து இருந்த நிலையில், குளுகோஸ் ஏற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், இரவு பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் ஊசி போட்டு, குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
அதிக காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருந்த அந்த நோயாளி, நர்சிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். தகாத இடங்களில் தொட்டதுடன், அவரை நோக்கி ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மருத்துவமனையின் நிர்வாகிகள் சம்பவம் பற்றி தகவல் அறிந்து உடனடியாக போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, அந்த நோயாளியை கைது செய்தனர். இதுபற்றி இளம்பஜார் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த நர்ஸ் சம்பவம் பற்றி கூறும்போது, காய்ச்சல் பாதித்த ஆண் நோயாளி ஒருவர் கொண்டு வரப்பட்டார். டாக்டர் அறிவுரையின்படி, இரவு பணியில் இருந்தபோது, நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்துவதற்கு தயாரானேன்.
அப்போது, அந்த நோயாளி என்னை தொட்டு, தகாத வார்த்தைகளை பேசினார். முறையான பாதுகாப்பின்றி பணியிடங்களில் வேலை செய்வது பாதுகாப்பற்றது என நாங்கள் உணர்கிறோம். ஒரு நோயாளி எப்படி இந்த வகையில் நடந்து கொள்ளலாம்? என கேட்டுள்ளார்.
இதுபற்றி டாக்டர் மசிதுல் ஹசன் கூறும்போது, இரவு 8.30 மணியளவில் சோட்டோசக் கிராமத்தில் இருந்து நோயாளி அழைத்து வரப்பட்டார். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட அவர் தொடக்கத்தில் இருந்து தவறாக நடந்து கொண்டார். சில பரிசோதனைகளுக்கு பின்பு, அவருக்கு ஊசி போடவும், குளுக்கோஸ் செலுத்தவும் அறிவுறுத்தினோம்.
அப்போது, அந்த நோயாளி நர்சிடம் தகாத வகையில் நடந்து கொண்டார். கண்ட இடங்களில் தொட்டு சீண்டலில் ஈடுபட்டார். அவருடைய குடும்பத்தினரிடம் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டு கொண்டோம். ஆனால், தொடர்ந்து அந்த நோயாளி தவறாக நடந்து கொண்டார்.
போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பணியை நிறுத்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில், போலீசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் கையாண்ட விதம் ஆகியவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.