பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.;
புதுடெல்லி,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நிதேஷ் குமாரும், 2வது செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் 3வது செட்டில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பாரா பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிதேஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் அபார சாதனை படைத்துள்ளார். அவர் தனது நம்பமுடியாத திறமைகள் மற்றும் விடாமுயற்சிக்காக அறியப்படுகிறார். வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை அவர் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியாவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.