ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது.. டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை கட்டணத்திற்கு வரி விதிக்கப்படுமா?

நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

Update: 2024-09-09 10:27 GMT

புதுடெல்லி:

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்தது. அதிக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. மேலும், டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்றும் அறிவித்தது.

அதன்பிறகு ரொக்க பரிவர்த்தனைகளைவிட, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. இப்போது கையில் பணம் எதுவும் இல்லாமலேயே, அனைத்து தேவைகளுக்கும் டிஜிட்டல் மூலமாகவே பணத்தை செலவு செய்ய முடியும் என்ற நிலை வந்துள்ளது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து வணிக நிறுவனங்களும் டிஜிட்டலில் பணம் வாங்குகின்றனர்.

இந்நிலையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனை பேமெண்ட்களுக்கு விதிக்கப்படும் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிசீலிக்கலாம் என தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா முதல்-மந்திரிகள், அருணாச்சல பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதல்-மந்திரிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிதேசங்களின் நிதியமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், புதிய வரி விதிப்புகள் தொடர்பாக, கூட்டம் முடிந்தபின்னர் அறிவிக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்