இளம்வயதில் புதிய சாதனை: 16 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மும்பை மாணவி
நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி காம்யா கார்த்திகேயன் சாதனை படைத்திருக்கிறார்.
மும்பை,
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8,848 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும். வெகுசிலரே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்து உள்ளனர். தற்போது மிக இளம்வயதில் இந்த சிகரத்தை தொட்ட இந்திய பெண்ணாக சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி. கடற்படையில் அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன் என்பவரின் மகளான காம்யா, நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திருக்கிறார். அவர் தற்போது மும்பையில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
16 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்டதையடுத்து, மிக இளம் வயதில் எவரெஸ்ட் ஏறிய இந்திய பெண்மணி மற்றும் உலக அளவில் இளம் வயதில் சிகரம் தொட்ட 2-வது பெண்மணி என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார். மேலும், இவர், உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் 6 சிகரங்களை தொட்டு சாதனை படைத்துள்ளார். வரும் டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். காம்யாவின் சாதனையை, இந்திய கடற்படை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளது.