தொடரும் வன்முறை.. மணிப்பூருக்கு மேலும் 50 கம்பெனி மத்திய படை வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு

சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

Update: 2024-11-18 11:18 GMT

புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரமாக வெடித்தது. ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

,ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகள், மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின்போது, மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது.

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்துவிட்டு அவசர ஆலோசனை நடத்தினார். மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து இன்றும் முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையை கையாள்வது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய செயல்திட்டத்தை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 12ம் தேதி வன்முறை ஏற்பட்டதையடுத்து, கூடுதலாக 20 கம்பெனி மத்திய ஆயுத காவல் படை வீரர்களை (மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 15 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) இருந்து 5 கம்பெனி வீரர்கள்) மணிப்பூருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது. அந்த படையினர் மணிப்பூர் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக மேலும் 50 கம்பெனி மத்திய ஆயுத காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் இந்த வாரமே மணிப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் 35 கம்பெனி வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து (சிஆர்பிஎப்) பெறப்படும். 15 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து (பிஎஸ்எப்) அனுப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்