மராட்டிய சட்டசபை தேர்தல்; பிரசாரம் ஓய்ந்தது
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.;
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் வெற்றியை தக்க வைக்க மகாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சிகளில் மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், மராட்டிய தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள்(புதன்கிழமை) மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.