ம.பி.: பயிற்சி ராணுவ அதிகாரிகளிடம் கொள்ளை, பெண் நண்பருக்கு பாலியல் பலாத்காரம்; கும்பல் வெறிச்செயல்

மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு குற்ற பின்னணி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.;

Update:2024-09-12 09:41 IST

போபால்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் பகுதியருகே சோட்டி ஜாம் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு அருகே மோ ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 2 இளம் ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் 2 இளம்பெண்களும் சென்றுள்ளனர்.

அப்போது, 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை மறித்தது. அவர்கள் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் தடிகளை வைத்திருந்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த அவர்கள், பயிற்சி அதிகாரிகளையும், பெண்களையும் கடுமையாக தாக்கினர்.

அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்தது. இந்நிலையில், ராணுவ வீரர் மற்றும் பெண் ஒருவரை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு, மற்ற 2 பேரையும் ரூ.10 லட்சம் பணம் கொண்டு வரும்படி கூறி அனுப்பினர்.

இதனால் அச்சமடைந்த அந்த அதிகாரி உடனடியாக திரும்பி, உயரதிகாரியிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவத்தினரும் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

போலீசார் வருவது பற்றி தெரிந்ததும், அந்த கும்பல் தப்பி சென்றது. இதன்பின், தாக்கப்பட்ட 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 2 ராணுவ அதிகாரிகளும் காயமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இந்த சம்பவத்தில், புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கொள்ளை, கும்பல் தாக்குதல், பாலியல் பலாத்காரம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது என இந்தூர் ஊரக எஸ்.பி. ஹிதிகா வசால் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கடந்த காலத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட பின்னணி உள்ளது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் அவர்களது பெண் தோழி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு என்பது இல்லை. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பா.ஜ.க. அரசின் எதிர்மறையான அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், இந்தியாவின் மகள்களின் சுதந்திரம் மற்றும் லட்சியங்களுக்கு தடையாக உள்ளது. சமூகமும், அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் பிரியங்கா காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளை தாக்கி, ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், உத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் இதயத்தை உலுக்குகின்றன.

நாட்டில் ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பலாத்காரம் மற்றும் வன்கொடுமைக்கு பலியாகின்றனர். வீட்டிலும், வெளியிலும், சாலையிலும், அலுவலகத்திலும் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இத்தகைய கொடூரச் செயல்களால் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பெண்களின் மன உறுதி உடைகிறது" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்