மராட்டிய சட்டசபை தேர்தல்... வாக்காளர்களை அதிகரிக்க செய்ய சலுகைகள் அறிவிப்பு

மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மும்பை நகரில் வாக்காளர்களுக்கு 20 சதவீத சலுகையை அளிக்க திரையரங்குகள் முன்வந்துள்ளன.

Update: 2024-11-08 19:22 GMT

புனே,

மராட்டியத்தில் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களை அதிக அளவில் பங்குபெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வர்த்தகர்கள், மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்கள் ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இதில் சில சலுகைகளை அளிக்க அவர்கள் முன் வந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், மும்பை போலீசார் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள், நடிகர் வர்ஷா உஸ்காவோன்கர், மோகன் ஜோஷி, ரோகித் ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன்படி, நவம்பர் 20 முதல் 22 வரையிலான நாட்களில் மும்பை நகரில் உள்ள பி.வி.ஆர். ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், ஸ்டெர்லிங், முக்தா, மூவிமேக்ஸ் மற்றும் மூவி டைம் போன்ற திரையரங்குகள் வாக்காளர்களுக்கு 20 சதவீத சலுகையை அளிக்க முன்வந்துள்ளன.

வாக்காளர்கள் வாக்களித்ததற்கான மை அடையாளம் கொண்ட விரலை காட்டி, வருகிற 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் 10 முதல் 20 சதவீத சலுகையை பெற்று கொள்ளலாம் என ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் தெரிவித்து உள்ளன. எனினும், ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து அல்லது வாங்கும் பொருட்களுக்கு இந்த சலுகை கிடையாது.

இதேபோன்று சில்லரை வர்த்தகத்தின் கீழ் வருகிற 20-ந்தேதி ஒரு நாள், 10 முதல் 15 சதவீத சலுகையை பெற்று கொள்ளலாம் என மராட்டிய சில்லரை வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் சில்லரை விற்பனை நிலையம் அறிவித்து உள்ளன. இதேபோன்ற சலுகையை கடந்த மக்களவை தேர்தலின்போதும், பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் சில்லரை வர்த்தக கடைகள் அளித்திருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்