ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியர் அடித்துக்கொலை

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை சிறுமியின் உறவினர்கள் மற்றும் சக பயணிகள் சரமாரியாக தாக்கினர்.

Update: 2024-09-13 12:22 GMT

லக்னோ,

லக்னோ-கான்பூர் இடையே இயக்கப்படும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீகார் மாநிலம் சிவான் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர் பிரசாந்த் குமார் என்பவர் பயணம் செய்தார். இவர் தனது இருக்கையில் ஒரு 11 வயது சிறுமி அமர்வதற்கு இடமளித்துள்ளார்.

இந்நிலையில், அந்த சிறுமியின் தாய் சற்று விலகிச் சென்றபோது பிரசாந்த் குமார் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், அந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பிற பயணிகள் சேர்ந்து பிரசாந்த் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் கான்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரிடம் பிரசாந்த் குமார் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், பிரசாந்த் குமார் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பிரசாந்த் குமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதனால் ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் குமார் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரசாந்த் குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்