வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம்.. கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியது
விதவிதமான மலர்கள் மூலம் அத்தப்பூ கோலங்கள் வரைந்து, ஓணம் பண்டிகைக்கு அழகு சேர்த்துள்ளனர்.
கேரள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை ஓணம். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும்.
இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 6-ம் தேதி தொடங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை தினமும் கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
10-வது நாளான இன்று சிகர நிகழ்வான திருவோண கொண்டாட்டம் நடைபெறுகிறது. மலையாள மக்கள் பழைய பாரம்பரியத்துடன் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்காக வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம் வரைந்து, ஓணம் பண்டிகைக்கு அழகு சேர்த்துள்ளனர். ஓணம் சத்யா விருந்து படைக்கின்றனர். கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் மிக பிரமாண்டமான அளவில் அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஓணத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மக்கள் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இன்று ஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றினர்.