சபரிமலையில் 18-ம் படி ஏறியதும் சாமி தரிசனம்: அமலுக்கு வந்தது புதிய நடைமுறை
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது.;

திருவனந்தபுரம்,
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
கோவிலில் இன்று (15-03-2025) முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் இந்த நாட்களில் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
அய்யப்ப பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் கிடைக்க வசதியாக நேரடி தரிசனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் 18-ம் படி ஏறி செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக சுற்றி வந்து பல மணி நேரம் காத்து நின்று சாமியை தரிசனம் செய்து வந்தனர்.
ஆனால், நேற்று பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்து மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரடியாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். இந்த புதிய நடைமுறையால் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சபரிமலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும். 2-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.