ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்; 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பலி
மராட்டியத்தின் புனே மற்றும் தானே நகரங்களில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.;

புனே,
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர் சிறுமியரும், பெரியவர்களும் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், வண்ண பொடிகளை நீரில் கரைத்து அவற்றை மற்றவர் மீது ஊற்றியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில், ஹோலி கொண்டாட்டத்தின்போது சில சோக சம்பவங்களும் நடந்துள்ளன. மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் கின்னாய் கிராமத்தில் இருந்து 5 பேர் நேற்று மாலை இந்திரயாணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்களில் கவுதம் காம்பிளே, ராஜ்திலீப் அக்மே மற்றும் ஆகாஷ் விட்டல் கோடே ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து தேசிய பேரிடர் பொறுப்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதேபோன்று, தானே மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய 4 சிறுவர்கள், கை கால்களை கழுவுவதற்காக உல்லாஸ் ஆற்றிற்கு சென்றுள்ளனர். இதில், அடுத்தடுத்து 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்கள் ஆரியன் மேதர், ஆரியன் சிங், சித்தார்த் சிங் மற்றும் ஓம் சிங் தோமர் என அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் மராட்டியத்தில் 7 பேர் உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.