நில மோசடி வழக்கு: லாலுவுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஒத்திவைத்தது.;

Update:2024-06-07 17:46 IST

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக சிபிஐ கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்