மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி

Update: 2024-09-12 09:46 GMT

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

Live Updates
2024-09-12 14:06 GMT

மக்களின் நலன் கருதி ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் இன்று மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளனர். இதனிடையே, ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

2024-09-12 12:20 GMT

முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். 

2024-09-12 12:05 GMT

மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்துள்ளனர்.

2024-09-12 10:52 GMT

கொல்கத்தாவில் மாநில சுகாதார துறையின் தலைமையகமான ஸ்வஸ்த்ய பவனுக்கு வெளியே இளநிலை மருத்துவர்கள் மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

2024-09-12 10:43 GMT

கொல்கத்தா மாநகர துணை கமிஷனர் (மத்திய மண்டலம்) இந்திரா முகர்ஜியை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் தலைவர் தபஸ் ராய் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் துணை கமிஷனர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பா.ஜ.க.வின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, எஸ்.என்.பானர்ஜி சாலையில் உள்ள இந்திரா முகர்ஜியின் அலுவலகத்திற்கு வெளியே போலீசார் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினர் முழக்கமிட்டனர். சிலர் தடுப்பு வேலிகளில் ஏறி நின்று காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‘திரிணாமுல் காங்கிரசின் சேவகர்களாக போலீசார் மாறிவிட்டனர். துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி மற்றும் கமிஷனர் இருவரும் இந்த வழக்கில் மெத்தனமாக இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என தபஸ் ராய் தெரிவித்தார்.

2024-09-12 10:31 GMT

ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். 

2024-09-12 09:54 GMT

கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இளநிலை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்தின் அருகில் மர்ம பை ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

2024-09-12 09:47 GMT

போராடும் டாக்டர்களை நேற்று மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசு அழைத்திருந்தது. இதற்காக, மேற்கு வங்காள தலைமை செயலாளர் மெயில் அனுப்பினார்.

ஆனால், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர். மேலும், பேச்சுவார்த்தையில் குறைந்தது 30 பேரையாவது அனுமதிக்கவேண்டும், பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். இதில், நேரலை என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதனால் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்