கேரளா: 3 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கேரளாவில் 3 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மச்சுக்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் லினேஷ். இவரது மனைவி கிரீஷ்மா (வயது 36). இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
கிரீஷ்மா தனது குழந்தையுடன் அச்சம்பெடிகாவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கிரீஷ்மா இன்று தனது குழந்தையுடன் கணவர் லினேஷ் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தயாராகிக்கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் கிரீஷ்மா குதித்துள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிரீஷ்மாவும் அவரது 3 மாத கைக்குழந்தையும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையுடன் கிரீஷ்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.