பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை: என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது
காஷ்மீரில் பஸ் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது.
ஜம்மு,
காஷ்மீரில் பஸ் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 50 பேர், ஒரு பஸ்சில் காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் மாலை, அங்கிருந்து கத்ராவில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு புறப்பட்டனர்.
ரியாசி மாவட்டம் போனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மறைவான இடத்தில் இருந்த பயங்கரவாதிகள் திடீரென பஸ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, டிரைவரை குறிவைத்து சுட்டனர். டிரைவர் நிலைதடுமாறியதில், சாலையை விட்டு விலகிய பஸ், அருகில் உள்ள பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். 41 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த 41 பேரும் ஜம்மு, ரியாசி மாவட்டங்களில் உள்ள 3 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பலியான 9 பேரை பற்றிய அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் டிரைவர் விஜய்குமார், கண்டக்டர் அருண்குமார் ஆகியோரும் அடங்குவர். இருவரும் ரியாசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜிந்தர் பிரசாத் பாண்டே சகானி, மம்தா சகானி, பூஜா சகானி, அவருடைய 2 வயது ஆண் குழந்தை டிட்டு சகானி ஆகியோரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிவம் குப்தா, ரூபி, 14 வயது சிறுவன் அனுராக் வர்மா ஆகியோரும் பலியானோரில் அடங்குவர். அவர்களின் உடல்கள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சம்பவ பகுதியில் ராணுவம், போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த பகுதியில், அடர்ந்த வனப்பகுதியும், பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன. அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ரியாசி மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்தில் உள்ள ரஜவுரி மாவட்டத்திலும் தேடி வருகிறார்கள்.
மேலும், தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த ஒரு குழுவும் ரியாசி மாவட்டத்தை சென்றடைந்துள்ளது. சம்பவத்தை விசாரித்து வரும் போலீசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ரியாசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.
இதற்கிடையே, ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 18 பேரை காஷ்மீர் கவர்னர் மனோஜ்சின்கா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.