மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே, உட்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இந்திய ரெயில்வே மற்றும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு அதிக அளவில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

Update: 2024-07-23 03:44 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் அவையில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.

இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இதன்படி, இன்று காலை 11 மணியளவில் அவர் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதில், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்டவை சார்ந்த விரிவான திட்டம் உள்ளடக்கிய நம்பக தன்மையுடன் அணுகும் ஆற்றல் வாய்ந்த திட்டங்கள் பற்றி பேசப்படும் என பார்க்கப்படுகிறது.

நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்த திட்டங்கள் செயல்படும். இந்த திட்டங்களுடன், உட்கட்டமைப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டு செலவினங்களுக்கு சாதனை அளவாக தொடர்ந்து அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது இந்த பட்ஜெட்டில் முக்கிய விசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, மத்திய பட்ஜெட்டில் இந்திய ரெயில்வே மற்றும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளிலும் நிதி ஒதுக்கீடு அதிக அளவில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ரெயில் விபத்துகளால் அவற்றின் பாதுகாப்பு குறைபாட்டை போக்கும் நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. இந்த சூழலில், நடப்பு பட்ஜெட்டில் ரெயில்வே துறையில், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017-ம் ஆண்டில் இருந்து ரெயில்வே துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. இதனால், ரெயில்வேக்கான இன்றைய பட்ஜெட்டில் வந்தே பாரத், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் வந்தே மெட்ரோ உள்ளிட்ட புதிய ரெயில்களின் வழியே பயணிகளின் பயண வசதிகளை மேம்படுத்துவது, புதிய பொருளாதார வழித்தடங்கள் ஆகியவற்றிற்கான திட்டங்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, நடுத்தர, பொதுஜனம் மற்றும் வருமான வரி கட்டும் மாத சம்பளம் பெறுவோர் என பலரும், வருமான வரி உச்ச வரம்பில் மாற்றங்கள், நிரந்தர கழிவுகளில் உயர்வு, புதிய வரி விதிப்பில் மாற்றங்கள், வீட்டு வசதிக்கான பலன்கள் மற்றும் பல விசயங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்