முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்; ராகுல் காந்தி, கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்தவர் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.;

Update: 2024-08-20 04:22 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இதற்கு முன் எப்போதும் செய்திராத விசயங்களை செய்து, 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை கொண்டு வர பங்காற்றியவர் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி கார்கே வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், நாடு இன்று நல்லிணக்க நாளை கொண்டாடுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவின் பெருமகன். கோடிக்கணக்கான இந்தியர்களிடம் நம்பிக்கைக்கான ஒளியை ஒளிர செய்தவர் என பதிவிட்டு உள்ளார்.

18 வயதுடையவர்களும் வாக்களிக்கலாம் என வயது வரம்பை குறைத்தவர். பஞ்சாயத்து ராஜ் முறையை வலுப்படுத்தியது, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி, கணினிமயமாக்கல் திட்டங்கள், சமாதான உடன்படிக்கைகளை தொடருதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் உள்ளடக்கிய கல்விக்கு முக்கியத்துவம் அளித்து புதிய கல்வி கொள்கை போன்ற அவருடைய பல குறிப்பிடத்தக்க முயற்சிகள் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

நாங்கள் பாரத ரத்னா, ராஜீவ் காந்திக்கு அவருடைய பிறந்த நாளில் மனப்பூர்வ அஞ்சலியை செலுத்துகிறோம் என்றும் அதில் அவர் பதிவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்