பாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்
பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.;
பெங்களூரு,
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இது தொடர்பாக எடியூரப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். கடந்த 14-ந் தேதி அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து எடியூரப்பா பெங்களூரு திரும்பினார். சி.ஐ.டி. போலீசாா் முன்பு விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எடியூரப்பா சி.ஐ.டி. போலீசார் முன்பு இன்று ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.