இறக்கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை..? வலைதளங்களில் பரவும் வீடியோவை நம்பாதீங்க..!

குழந்தை பறப்பது போன்ற வீடியோவை பகிர்ந்தவர்கள் இது இயற்கையின் அதிசயம் என்றும், கடவுளின் செயல் என்றும் கருத்துக்களை பதிவிட்டனர்.

Update: 2024-07-05 06:18 GMT

சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோக்களை நட்பு வட்டாரங்களுக்கு ஷேர் செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இதில் உண்மையான வீடியோக்களைவிட போலியான வீடியோக்கள், உணர்வுகளை தூண்டக்கூடிய வீடியோக்கள் மிக வேகமாக பரவுகின்றன. அந்த அளவுக்கு சிலர் போலியான வீடியோக்களை உண்மையான சம்பவம் போன்று தத்ரூபமாக சித்தரித்து காட்டுகின்றனர். சிலர் பழைய வீடியோக்களை புதிய தகவலுடன் சேர்த்து பரப்புவதையும் பார்க்கிறோம்.

அவ்வகையில், சமீப காலமாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு ஜோடி இறக்கைகளுடன் ஒரு குழந்தை பறப்பதாக அந்த வீடியோவில் உள்ளது. வீடியோவில் பின்னணி குரல் கொடுத்த நபர், அந்த குழந்தையின் பெயர் ரிக்கி என்றும் அவரது குழந்தையின் நிலை குறித்து விவரிப்பதையும் கேட்க முடிகிறது.

குழந்தைக்கு இறக்கைகள் முளைத்திருப்பதை பார்த்து வியப்படைந்த தாயார், குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்கிறார். அப்போது, குழந்தை ரிக்கியின் எலும்புடன் இறக்கைகள் இணைந்திருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர் கூறுகிறார்.

பின்னர் அந்த குழந்தையின் வளர்ச்சி, பொது இடத்தில் பறந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது, குழந்தையின் அசாத்திய திறனை செய்தியாளர்களுக்கு காட்டும்போது, பறந்துகொண்டிருந்த குழந்தை வானத்தில் பறந்து காணாமல் போவது ஆகிய காட்சிகளுடன் அந்த வீடியோ முடிகிறது.

வீடியோவை பகிர்ந்தவர்கள் இது இயற்கையின் அதிசயம் என்றும், கடவுளின் செயல் என்றும் கருத்துக்களை பதிவிட்டனர். இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை பறப்பது உலகிலேயே இதுதான் முதல் நிகழ்வாக இருக்கும் என்றும் சிலர் ஆச்சரியம் தெரிவித்தனர். எனினும், இதுபோன்ற செய்திகளை சமீபகாலமாக எந்த ஊடகங்களிலும் பார்த்ததில்லை. எனவே, இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது.

இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் குறித்து இணையதளத்தில் தேடியபோது, இது உண்மையான சம்பவம் அல்ல, 2009-ம் ஆண்டு வெளியான 'ரிக்கி' என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் என்பது தெரியவந்தது. யூடியூபிலும் இதுதொடர்பான வீடியோக்கள் கிடைத்தன. திரைப்படம் தொடர்பாக யூடியூபில் வெளியான வீடியோ: 

Full View

காமெடி கலந்த கற்பனை திரைப்படமான ரிக்கியை பிரான்காயிஸ் ஓசோன் இயக்கி உள்ளார். அந்த படத்தின் முக்கியமான காட்சிகளை எடுத்து பின்னணி தகவலுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

எனவே, வைரலாகும் இந்த வீடியோ 'ரியல் அல்ல ரீல்' என்பது உறுதியாகி உள்ளது. மக்கள் இதனை நம்ப வேண்டாம். கற்பனை காட்சியாக நினைத்து கடந்து செல்லுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்