காரை விட்டு ஏற்றுடா... சாராய கடத்தலின்போது போலீசாரிடம் சிக்கிய சி.ஐ.டி. பெண் கான்ஸ்டபிள்

நீடா போலீஸ் சீருடையில் இருந்தபடி, நடனம் ஆடிய வீடியோ காட்சிகளை எடுத்து கடந்த காலத்தில் வெளியிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.;

Update:2024-07-04 04:24 IST

கட்ச்,

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பச்சாவ் பகுதியில் சாராயம் கடத்தப்படுகிறது என கிழக்கு கட்ச் போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் தனிப்படை அமைத்து இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பச்சாவ் நகரில் சோப்தவா பகுதியருகே வெள்ளை நிற கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், காரில் இருந்த ஓட்டுநரோ போலீசார் மீது காரை ஏற்றி அவர்களை கொல்ல முயன்றிருக்கிறார். உஷாரான போலீசார் எப்படியோ உயிர் தப்பினர். அந்த கார் விரைவாக பறந்தது. எனினும், வேறு காரில் போலீசார் அந்த காரை துரத்தி சென்று பிடித்தனர்.

திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தில், காரில் இருந்தவர்களை சோதனை செய்தபோது, ஒரு நிமிடம் போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

அந்த காரில் சாராய கடத்தல்காரனான யுவராஜ் சிங்குடன், பெண் போலீஸ் கான்ஸ்டபிளான நீடா சவுத்ரி இருந்துள்ளார். அவர் கிழக்கு கட்ச் பகுதியின் காந்திதம் சி.ஐ.டி. காவல் நிலையத்தில் பணிபுரிபவர்.

அந்த காரில் இருந்து சாராயம் மற்றும் பீர் பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். யுவராஜ் சிங்குக்கு எதிராக கொலை முயற்சி உள்பட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நீடா கைது செய்யப்பட்டபோது, குடிபோதையில் அவர் இருந்தது தெரிய வந்தது. அவர் சி.ஐ.டி. பெண் அதிகாரி என குறிப்பிடாமல் வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த காலத்தில் போலீஸ் சீருடையில் இருந்தபடி, நடனம் ஆடிய வீடியோ காட்சிகளை எடுத்து நீடா வெளியிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்