முந்தி செல்வதில் தகராறு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு அடி, உதை; வைரலான வீடியோ

மராட்டியத்தின் புனே நகரில், 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் ஐ.டி. நிறுவன இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-07-21 02:24 GMT

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் பஷான்-பனேர் இணைப்பு சாலையில் ஜெரிலின் டி சில்வா என்பவர் 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, காரில் ஆடவர் ஒருவர் அவரை முந்தி செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவருக்கு வழி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், 2 கி.மீ. தூரத்திற்கு பின்னாலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதன்பின்னர், திடீரென ஸ்கூட்டரை முந்தி சென்று குறுக்காக நிறுத்தினார். இதனால், பயந்து போன ஜெரிலின் வண்டியை நிறுத்தினார்.

காரில் இருந்த நபர் ஆத்திரத்தில் கீழே இறங்கியதும், ஜெரிலினின் தலைமுடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தி, தாக்கியுள்ளார். இதில், அந்த பெண்ணுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கூடியுள்ளனர்.

கூட்டம் கூடியும் அந்நபர் தப்பி சென்று விட்டார். அவர் யாரென்ற விவரம் தெரிய வரவில்லை. இதுபற்றி அதிர்ச்சிகர வீடியோ ஒன்றை ஜெரிலின் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், அவர் தாக்கப்பட்ட விவரங்களை கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் பற்றி சதுர்ஷிரிங்கி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். காரில் சென்ற நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

புனே நகரில், கடந்த 2 மாதங்களுக்கு முன் 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் 2 ஐ.டி. நிறுவன இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இதேபோன்று, கடந்த செவ்வாய் கிழமை முந்த்வா-மஞ்சரி சாலையில் கோழிகளை ஏற்றி சென்ற லாரி மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியின் மகன் சவுரப் பண்டு குடிபோதையில் காரை கொண்டு ஏற்றியுள்ளார்.

இதில், ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 2 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சவுரப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்