டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 20 கோடி பணம் மோசடி... 3 பேர் கைது
டிஜிட்டல் கைது என கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

மும்பை,
டிஜிட்டல் கைது என்பது ஒரு புதிய சைபர் மோசடி, இதில் சைபர் குற்றவாளிகள் சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல நடித்து உங்கள் பெயரில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது. இதனால் உங்களை கைது செய்யப் போகிறோம். இவ்வாறு வீடியோ அழைப்புகள் மூலம் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடியில் பலரும் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
அதேபோல ஒரு டிஜிட்டல் கைது சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 26ம் தேதி மும்பையை சேர்ந்த 86 வயது பெண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. அதனை இவர் எடுத்து பேசினார். அப்போது எதிரில் பேசிய நபர் தான் ஒரு சிபிஐ அதிகாரி என தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். அப்போது அந்த நபர் உங்கள் மீது மோசடி வழக்கு உள்ளது என தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்போவதால் உங்களை தனிமை படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதனை செய்யவில்லை என்றால் உங்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டினார். இதற்கு பயந்த பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த நபரின் வீடியோ அழைப்பில் இணைந்தார்.
பின்னர் அந்த நபர் உங்களது கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் எனக்கூறி பெண்ணின் கணக்கை சோதனை செய்தார். பின்னர் அனைத்து பணத்தையும் எங்களிடம் ஒப்படையுங்கள் விசாரணை முடிந்தபின் திருப்பி செலுத்துகிறோம் என தெரிவித்தார்.
இதனால் பல ஆண்டுகள் சேமித்து வைத்திருந்த ரூ. 20 கோடியை அவர்கள் கொடுத்த இணைப்பின் மூலம் பணத்தை மாற்றி உள்ளார். பணத்தை பெற்ற பின்னர் விசாரணை முடியும் வரை வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும்ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு பின்னரும் இதனை நாங்கள் உறுதி செய்வோம் மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக வெளியில் செல்ல முடியாமல் அந்த பெண் வெகுவாக அவதிப்பட்டுள்ளார். அப்போது இது குறித்து அறிந்த வீட்டில் வேலை செய்து வந்த பெண் பாதிக்கப்பட்டவரின் மகளிடம் தெரிவித்தார். பின்னர் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜமில் ஷேக் (20), ஹிருத்திக் சேகர் தாக்கூர் (25), ராசிக் அசான் பட் (20) ஆகிய 3 பேரை ஒன்றன் பின் ஒன்றாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.