'மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்' - ராதாகிருஷ்ணன்
மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"முன்பெல்லாம் குறிப்பிட்ட சீசனில்தான் மழை பெய்யும். ஆனால் அண்மைக் காலங்களில், திடீர் கனமழையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக மாறிவிடுகிறது. சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள், முக்கியமான இடங்களில் நிறைவடைந்துவிட்டன.
வடசென்னை கொசஸ்தலை பகுதியில் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தென்சென்னை கோவலம் பகுதிகளில் சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சேற்று சாலையால் பெரும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் உரிய திட்ட அனுமதி இல்லாமல் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும். மண்டல வாரியாக மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.