டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-28 05:39 GMT

புதுடெல்லி,

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் இருந்து வந்த நிலையில், நேற்று சற்று மேம்பட்டு காற்று தரக் குறியீடு 301 ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 313 ஆக பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் 'மிக மோசமான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை மூடுபனி நிலவியது.

டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில், கடுமையான பிரிவில் எந்த கண்காணிப்பு நிலையமும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.2 புள்ளிகள் குறைந்து 10.2 டிகிரி செல்சியசாக இருந்தது என்றும் அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம். 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 450 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது. 450 மேல் இருந்தால் கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்