ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Update: 2024-11-28 02:48 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது. இதன்படி இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து, அம்மாநில கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று முதல் மந்திரியாக பதவியேற்கிறார். அவருக்கு கவனர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது தொடர்பாக என்ற பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சிக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த வாரம் கேபினட் விரிவாக்கம் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பும் அவையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில், இந்தியாகூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மேகலயா முதல்-மந்திரி கொன்ராட் சர்மா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்