கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.;

புதுடெல்லி,
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, இந்த இவிவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பினால் என்ன காரணத்துக்காக அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது என்கிற விவரம் சொல்லப்படுவது இல்லை என்றும், 2-வது முறையாக மசோதாவை கவர்னருக்கு அனுப்பினால் அரசியல் சாசனப்படி அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும், ஆனால் கவர்னரோ, இந்த மசோதாக்களை கிடப்பில் போடுவது அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்கிற போக்குகளை கையாள்கிறார் என்றும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்றும் வாதிடப்பட்டது.
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் போது, 12 மசோதாக்களில், 10 மசோதாக்களை கவர்னர் ஏன் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்... இதற்கு கவர்னர் ஏன் காரணம் தெரிவிக்கவில்லை? எதற்காக 2 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்..? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடுகள் இருக்கின்றன. கவர்னர் ஆர்.என்.ரவி தமக்கு தனியாக விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறாரா..? என்று சுப்ரீம்கோர்ட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது.
இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் இன்று காலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நடைபெறுகிறது. இன்றைய விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கவர்னர் மற்றும் மத்திய அரசின் தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.