மதுபோதையில் காரை ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவன்: பைக் மீது மோதி பெண் பலி - அதிர்ச்சி வீடியோ
மதுபோதையில் சட்டக்கல்லூரி மாணவன் ஓட்டிய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதியதில் பெண் உயிரிழந்தார்.;

காந்தி நகர்,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ரக்ஷித் சவுரசியா (வயது 20). இவர் குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். அதேபோல், பிரன்சு சவுகான் என்ற இளைஞர் வஹொடியா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் கல்வி பயின்று வருகிறார். ரக்ஷித் சவுரசியாவும், பிரன்சு சவுகானும் நண்பர்கள் ஆவர்.
இதனிடையே, பிரன்சு சவுகானின் தந்தை தொழிலதிபர் ஆவார். அவரின் காரை பிரன்சு சவுகான் நேற்று கொண்டு வந்துள்ளார்.
பின்னர், பிரன்சு சவுகானும், அவரது நண்பரான ரக்ஷித் சவுரசியாவும் மது குடித்துள்ளனர். மது போதையில் இருந்த ரக்ஷித் சவுரசியா காரை ஓட்டியுள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் வடோதரா நகரின் முக்கிய சந்திப்பு பகுதியில் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
அப்போது, சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கார் மோதியது. அதேபோல், சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது. இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற ஹேமாலிபென் பட்டேல் என்ற பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞன் ரக்ஷித் சவுரசியா, காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த நபர்கள் சவுரசியாவை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அவர் மீண்டும் ஒருமுறை இதுபோல் மோத வேண்டும், 'ஓம் நமச்சிவாயா' என போதையில் கூறியபடி சாலையில் ஓடியுள்ளார். இதையடுத்து, சவுரசியாவை பிடித்த அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதற்குள் காரில் இருந்த சவுரசியாவின் நண்பரான பிரன்சு சவுகான் தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஹேமாலிபென் பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ரக்ஷித் சவுரசியாவை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பிரன்சு சவுகானையும் கைது செய்தனர். மதுபோதையில் காரை ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவன் ரக்ஷித் சவுரசியா பைக்கில் சென்ற பெண் மீது மோதிய சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.