நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-08-22 05:40 GMT

திருவனந்தபுரம்,

மும்பையிலிருந்து 135 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, காலை 7.30 மணியளவில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, விமானியால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காலை 7.36 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும், காலை 8 மணியளவில் விமானம் பாதுகாப்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் காலை 8.44 மணியளவில் பயணிகள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனை தொடர்ந்து விமானம் மற்றும் பயணிகளின் பைகளை வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விமான நிலைய போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர் இந்தியா விமானம், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்