பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்கத்தில் மசோதா நிறைவேற்றம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2024-09-03 09:33 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு சட்ட சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்து மம்தா பானர்ஜி பேசியதாவது:-

புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்குவங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர். புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை" என்றார். தொடர்ந்து இந்த மசோதா ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த உச்சபட்ச தண்டனை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும். இதுமட்டும் இன்றி பாலியல் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை விதிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கவர்னரின் ஒப்புதலுக்குப் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தபின்பு இந்த மசோதா சட்டமாகும் 

Tags:    

மேலும் செய்திகள்