இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு லவ் எமோஜியுடன் பதிலளித்த வங்காளதேச மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்

இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு லவ் எமோஜியுடன் பதிலளித்த வங்காளதேச மாணவி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Update: 2024-08-27 10:19 GMT

புதுடெல்லி,

அசாம் மாநிலம் சில்சாரில் அமைந்துள்ள தேசிய கல்வி மையத்தில் படித்து வந்த வங்கதேச மாணவி, சமூக வலைதளங்களில் இந்தியாவுககு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட காரணத்தால், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தை சேர்ந்தவர் மைஷா மஹாஜபின். இவர் கடந்த 2021ம் ஆண்டு அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள என்ஐடியில் சேர்ந்து படித்து வந்தார். இவர், முகநூலில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு தொடர்ந்து லவ் எமோஜியை பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம், கடந்த வாரம் சில்சார் அசாம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மூலம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வங்காளதேச மாணவியின் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு, அவரது நடவடிக்கைகள் புகாராக எழுந்தன. இதையடுத்து, அந்த மாணவி இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கச்சார் காவல்துறை கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், "இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு அவர் தொடர்ந்த் லவ் எமோஜியை பதிவிட்டு வந்துள்ளார். இது நாடு கடத்தல் அல்ல, வங்காளதேச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திருப்பி அனுப்பப்பட்டார். அந்த மாணவி இன்னும் தன்னுடைய படிப்பை முடிக்கவில்லை. தனது படிப்பை முடிக்க அவர் திரும்ப வருவாரா என்பதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. மேலும் அந்த மாணவி நேற்று காலை, இந்தியா - வங்காளதேச சர்வதேச எல்லையான கரீம்கஞ்ச் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டார். அங்கு அவர் முழு பாதுகாப்புடன் இந்திய எல்லையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தனது சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்குமாறு சில்சார் என்.ஐ.டி. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததால் வங்காளதேச அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்