98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறை வசதி உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் சுமார் 98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2024-11-03 03:17 GMT

புதுடெல்லி,

6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவரும் சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. அதில் நாடு முழுவதும் 97.5 சதவீத அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனியாக கழிவறை வசதிகள் உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பிரமாண பத்திரத்தில், "நாடு முழுவதும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக 16 லட்சம் கழிவறைகள் மற்றும் மாணவிகளுக்காக 17.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர் கழிவறைகளும், 2.9 லட்சம் மாணவிகள் கழிவறைகளும் உள்ளன.

மேற்கு வங்காளத்தில் 99.9 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 99.7 சதவீதம், கேரளா மற்றும் சத்தீஷ்காரில் 99.6 சதவீதம், சிக்கிம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் 99.5 சதவீத பள்ளிகளில் தனி கழிவறை வசதிகள் உள்ளன. மேலும் உத்தரபிரதேசத்தில் 98.8 சதவீதம், கர்நாடகாவில் 98.7 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 98.6 சதவீதம், பீகாரில் 98.5 சதவீத பள்ளிகளில் தனித்தனி கழிவறைகள் உள்ளன.

ராஜஸ்தானில் 98 சதவீதம், மராட்டியத்தில் 97.8 சதவீதம், ஒடிசாவில் 96.1 சதவீத பள்ளிகள் இலக்கை எட்டியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் தேசிய சராசரியான 98 சதவீதத்துக்கு குறைவாக உள்ளன. அதேநேரம் காஷ்மீரில் 89.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே சிறுமிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்