அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் பழங்கால பொருட்கள்
297 பழங்கால பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்கள் பற்றி பா.ஜனதா உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "அமெரிக்காவில் மீட்கப்பட்ட இந்தியாவின் 297 பழங்கால பொருட்களும் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட நினைவுச்சின்னங்கள், தளங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பழங்கால பொருட்கள் ஏதேனும் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டு, திருடப்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றின் சட்டவிரோத ஏற்றுமதியும் தடுக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.