மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலி; 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலியை வடிவமைத்த 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு தெரிவித்தார்.;

அமராவதி,
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மகன் சித்தார்த். (14). இவர் மாரடைப்பை சில வினாடிகளில் கண்டுபிடிக்கும் மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளார். இதனை அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்து பார்த்ததில் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மகேஷ், தனது தாய்நாட்டிற்கு மகனை அழைத்து வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் இந்த செயலியை சோதித்து காட்ட விரும்பினார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. சிர்கடியன் ஏ.ஐ. (circadian AI ) எனப்படும் இந்த செயலியை ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு ஒலிகளை பதிவுசெய்து, ஆரம்பகட்ட இருதய நோய்களை துல்லியமாக கண்டறியப்பட்டது. ஒரேநாளில் சுமார் 700 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் ஏற்பாட்டின்பேரில் நேற்றுமுன்தினம் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சித்தார்த் சந்தித்தார். தனது கண்டுபிடிப்பு குறித்து முதல்-மந்திரிக்கு நேரடியாக சித்தார்த் விளக்கினார். அப்போது ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணும் உடனிருந்தார். சித்தார்த்துக்கு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது 'எக்ஸ்' தளத்தில் கூறியதாவது;-
"சிறுவன் சித்தார்த்தின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனை. அவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 96 சதவீதம் துல்லியத்துடன் மாரடைப்பு குறித்து முன்கூட்டியே முடிவுகள் தெரியவரும். ஒரகல் மற்றும் ஏ.ஆர்.எம். நிறுவனங்களில் உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழை இந்த ஆப் பெற்றுள்ளது. சிறுவனின் அனைத்து முயற்சிக்கும் ஆந்திர அரசு முழு ஆதரவளிக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.