துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நடிகர் கோவிந்தா காயம் அடைந்துள்ளார்.

Update: 2024-10-01 05:38 GMT

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் கோவிந்தா. இவர் இந்தியில் 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணிக்கு மும்பையிலிருந்து கொல்கத்தா புறப்படும் விமானத்தை புடிக்க தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு செல்வதற்கு முன்பாக தான் வைத்திருக்கும் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்திருக்கிறார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக கைத்தவறி அந்த துப்பாக்கி கீழே விழுந்து கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது காலில் இருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர். அதன்பின்னர், தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

இது குறித்து நடிகரின் மேலாளர் சஷி சின்ஹா கூறுகையில், 'நடிகர் கோவிந்தா இன்று காலை 6 மணிக்கு கொல்கத்தா புறப்படும் விமானத்தில் செல்வதாக இருந்தது. அதற்காக விமானநிலையம் புறப்படுவதற்கு முன்பு தான் வைத்திருக்கும் துப்பாக்கியை துடைத்தபோது கைதவறி சுட்டுவிட்டது. சிகிச்சைக்கு பின்னர் தற்போது நடிகர் கோவிந்தா நலமுடன் உள்ளார்' என்றார்.

60 வயதாகும் கோவிந்தா 1990களில் பிரபலமாக விளங்கினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார். பின்னர் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதோடு மக்களவை தேர்தலில் பிரசாரமும் செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்