உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு
மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா கட்சி வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.;
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
குறிப்பாக சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பிரிவு சிவசேனா படுதோல்வியை கண்டது. சுமார் 95 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் இரு அவைகளின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே, மேலவைக்கு கட்சியின் குழு தலைவராக முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைக் கொறடாவாக சுனில் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் முன்னாள் மந்திரியும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவசேனாவின் மிலிந்த் தியோராவை 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்கரே தோற்கடித்தார்.