திரிஷ்யம் பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட்டால் மூடிய காதலன்

திரிஷ்யம் பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-10-22 14:11 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் வான்கடே(33). இவருக்கு திருமண வரன் தேடும் இணையதளம் மூலமாக ஜோத்சனா ஆக்ரே(32) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஜயோத்சனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அஜய் வான்கடேவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமும் செய்து வைத்துள்ளனர். இதன் பிறகு ஜோத்சனாவை அஜய் வான்கடே புறக்கணிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஜோத்சனா மீண்டும் அஜய் வான்கடேவை தொடர்பு கொள்ள முயற்சித்து வந்துள்ளார்.

இதனால் தனது திருமண வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்த அஜய், தனது முன்னாள் காதலி ஜோத்சனாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதன்படி கடந்த ஆகஸ்ட் 28-ந்தேதி ஜோத்சனாவை வார்தா சாலை பகுதிக்கு வருமாறு அஜய் அழைத்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

பின்னர் ஜோத்சனாவை அங்குள்ள ஒரு சுங்கச்சாவடியின் அருகே அழைத்துச் சென்ற அஜய், அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மயங்கிய ஜோத்சனாவின் கழுத்தை நெரித்து அஜய் வான்கடே கொலை செய்துள்ளார். பின் அவரது உடலை, அருகில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் முந்தைய நாள் இரவு ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அஜய் புதைத்துள்ளார்.

மேலும் கொலைக் குற்றம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உடலின் மீது சிமெண்ட் ஊற்றி மூடியுள்ளார். இதற்கிடையில் ஜோத்சனாவை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அஜய் வான்கடே மற்றும் ஜோத்சனா இடையே அடிக்கடி தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளதை கண்டறிந்தனர்.

இதனால் அஜய் வான்கடேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். இதற்கிடையில் நாக்பூர் செஷன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி அஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அஜய் வான்கடேவை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அஜய் வான்கடே கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதோடு ஜோத்சனாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர் போலீசாரிடம் அடையாளம் காட்டினார். வார்தா சாலையில் உள்ள தன்கார்கோன் சுங்கச்சாவடி அருகே ஜோத்சனாவின் உடல் புதைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை மற்றும் கொலையை மறைப்பதற்கு குற்றவாளி பயன்படுத்திய திட்டம் ஆகியவற்றை பார்க்கும்போது, மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் திரைப்பட பாணியில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்