மணிப்பூரில் 3 பேரின் உடல்கள் கண்டெடுப்பு...போலீஸ் தீவிர விசாரணை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 6 பேரின் உடல்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த உடல்கள் அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 6 பேர் காணாமல் போன ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன என்று அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இந்த மூன்று உடல்களும் காணாமல் போன 6 பேரின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக காத்திருப்பதாகவும், அடையாளத்திற்காக புகைப்படங்களை சேகரித்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் முதல்-மந்திரி என் பிரேன் சிங் நேற்று இரவு மூத்த மந்திரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், உடல்கள் மீட்கப்பட்ட செய்திக்குப் பிறகு மாவட்டங்களின் நிலைமை குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இம்பால் பள்ளத்தாக்கு முழுவதும் மூன்று உடல்கள் மீட்கப்பட்ட செய்தி பரவியதால், 5 மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்ததால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.