ராஜஸ்தான் லாரி விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்

ராஜஸ்தான் லாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-12-20 21:17 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை எரிவாயு (LPG - Liquefied petroleum gas) ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது.

ஜெய்ப்பூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு லாரி மீது எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. மேலும், எதிரே வந்த சில வாகனங்கள் மீதும் மோதியது.

இந்த கோர விபத்தில் எரிவாயு டாங்கரில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவி எரிவாயு டாங்கர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்