கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே பிரசவ நேர உயிரிழப்புகள் தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பிரசவங்களுக்கு 28 குழந்தைகள் உயிரிழக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 13 குழந்தைகள்தான் மரணமடைகின்றன. அதுபோல, பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் உயிரிழப்பு இந்திய அளவில் ஒரு லட்சத்துக்கு 97 என்ற அளவில் உள்ளன. தமிழ்நாட்டில் அது 54 ஆகத்தான் இருக்கின்றது. அதற்கு, தமிழ்நாட்டில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கவேண்டும் என்ற முனைப்பும், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு திட்டங்களும்தான் காரணம்.
சுகப் பிரசவத்துக்கு தமிழ்நாட்டிலுள்ள 2,686 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை நகர மேயராக இருந்தபோது 2008-2009-ல் ஷெனாய்நகர் மாநகராட்சி மருத்துவமனையில் தொடங்கிவைத்தார். பின்னர், அமைச்சரானவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தினார். இந்த திட்டம் மட்டுமல்லாமல், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி முதன்முதலாக 1989-ல் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தது அவர்களுக்கு பேரூதவியாக இருக்கிறது.
அப்போது பேறு காலத்துக்கு முன்பு இரு மாதங்களும், பேறு காலத்துக்கு பிறகு இரு மாதங்களும் அவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதற்காக தலா ரூ.50 வீதம் மொத்தம் ரூ.200 வழங்கும் திட்டத்தை அறிவித்தார். 1998-ல் இந்த நிதியுதவி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தை 2006-ல் மீண்டும் கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் அதாவது 60:40 என்ற விகிதத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டமாக உருவெடுத்தது. இந்த திட்டத்துக்காக அப்போது முதல் இப்போதும் மத்திய அரசாங்கம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறது.
பின்னர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த உதவித்தொகை ரூ.12 ஆயிரமாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இதனுடன் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகமும் அடங்கும். இப்போது இந்த திட்ட செயலாக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் மேலும் செம்மைப்படுத்தப்பட்டு, மொத்த தொகையான ரூ.18 ஆயிரத்தில் கர்ப்பம் அடைந்த 3 மற்றும் 4-வது மாதங்களில் தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியும், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், அது அரசு மருத்துவமனையாக இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் ரூ.4 ஆயிரம் உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும், ரூ.4 ஆயிரம், பிறந்த குழந்தைக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டவுடன் வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 9 மாதத்தில் தடுப்பூசி போடப்பட்டவுடன் மேலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் மட்டும் அல்லாமல், பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் நிலையில், இப்போது மேலும் பல தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் பிரசவங்கள் நடக்கிறது. இதில் 6 முதல் 6½ லட்சம் கர்ப்பிணிகளுக்கு இந்த திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ரூ.960 கோடி ஆண்டுக்கு செலவாகிறது. சுகப்பிரசவத்துக்கு துணை புரியும் ஒரு மகத்தான திட்டம் இது.