தங்கத்தின் விலை உயர்வால் எட்டாக்கனியானது பட்டுச்சேலை!

தங்கம், வெள்ளி உயர்வால் பட்டுச்சேலை விலை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை தற்போது உயர்ந்துவிட்டது.

Update: 2024-10-11 05:00 GMT

சென்னை,

தங்கம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. அதிலும் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது ஒரு குண்டுமணி தங்கமாவது போடவேண்டும் என்று நினைப்பார்கள். திருமணம் பேசும்போது, மணப்பெண்ணுக்கு என்ன போடுகிறீர்கள்? என்றுதான் ஏழையோ, பணக்காரர்களோ எல்லா குடும்பங்களிலும் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் கேட்பார்கள். சில குடும்பங்களில் பையனுக்கு என்ன போடுகிறீர்கள்? சங்கிலி போடுகிறீர்களா?, மோதிரம் போடுகிறீர்களா?, 'பிரேஸ்லெட்' போடுகிறீர்களா? என்று கேட்கும் வழக்கமும் தலையெடுத்துவிட்டது. அப்படி அதிக கிராக்கியுள்ள தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகம்தான்.

விலைவாசி என்றால், ஒரு பொருளின் விலை ஏறவும் செய்யவேண்டும், இறங்கவும் செய்யவேண்டும். ஆனால், இறக்கத்தையே காணாமல் விலை ஏறிக்கொண்டே போகும் பொருள் ஒன்று உண்டு என்றால் அது தங்கம்தான். சில நேரங்களில் கொஞ்சம் இறங்கினாலும், உடனடியாக இறங்கிய வேகத்தைவிட மிக அதிகமாக ஏறிவிடும். 1961-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி 'தினத்தந்தி'யில் ஒரு பவுன் விலை ரூ.94 என்பது 8 கால தலைப்பு செய்தியாக இருந்தது. அப்போது தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அந்த விலை உயர்வு குறித்து ஒரு 'கார்ட்டூன்' படம் போடுவதற்கு ஓவியரை அழைத்து, "நீ.. பவுன் பார்த்து இருக்கிறாயா?" என்று கேட்டார். ஓவியர், "இல்லை" என்றவுடன் ரூ.100 கொடுத்து நகைக்கடைக்கு சென்று ஒரு பவுன் வாங்கிக்கொண்டு வா என்றார். ஓவியரும் வாங்கிக்கொண்டு வந்தவுடன் அதைப்பார்த்து படம் வரையச் சொன்னார். ஓவியர் வரைந்தவுடன் அந்த பவுனை திருப்பிக்கொடுத்தபோது அதை உனக்கே பரிசாக தருகிறேன், வைத்துக்கொள் என்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சொன்னது, அப்போது பத்திரிகை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை இப்போது பவுனுக்கு ரூ.56,200 ஆக இருக்கிறது. திருமணத்துக்கு முக்கியமானது தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் மட்டுமல்லாமல் பட்டுச்சேலைகளும்தான். பட்டுச்சேலையை மணப்பெண் மட்டுமல்லாது, உற்றார் உறவினர் வீடுகளில் உள்ள பெண்கள் அனைவருமே திருமணத்தன்று அணிவார்கள். பட்டுச்சேலையின் ஜரிகை என்பது தங்கம் மற்றும் வெள்ளி இழையினால் தயாரிக்கப்படுகிறது. இப்போது தங்கத்தின் விலை உயர்வு போல, வெள்ளியின் விலையும் அதிகரித்துவிட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்தை தொட்டுவிட்டது. இதன் தாக்கம் காஞ்சீபுரம் பட்டுச்சேலையின் மீதும் விழுந்து, அதன் விலை உயர்வால் அதுவும் எட்டாக்கனியாகிவிட்டது. காஞ்சீபுரத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் பட்டுச்சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

தங்கம், வெள்ளி உயர்வால் பட்டுச்சேலை விலை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை தற்போது உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி நேரத்தில் இருந்த காஞ்சீபுரம் பட்டுச்சேலை விலை இப்போது 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. அப்போது ரூ.70 ஆயிரமாக இருந்த உயர் ரக பட்டுச்சேலை விலை இப்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக எகிறிவிட்டது. இப்போது சேலை விலை இவ்வளவு உயர்ந்தவுடன் நெசவாளர்கள், பொதுமக்கள் வாங்கக்கூடிய அளவில் அதிக ஜரிகை இல்லாத சேலைகளாகவே நெய்யத் தொடங்கிவிட்டார்கள். ஆக தங்கம், வெள்ளி விலை உயர்வு நகைகள், பாத்திரங்களின் விலையை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், பட்டுச்சேலை வரை பாய்ந்துவிட்டது என்பது பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்