மழைக்கால ஆரோக்கியம்.. நோய்த் தொற்றுகளை தடுக்க இவையெல்லாம் அவசியம்

சுவாச நோய்த் தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.

Update: 2024-11-02 00:30 GMT

மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுப்புற சூழல் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மிகுந்த கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

டைபாய்டு:

சுகாதாரமற்ற தண்ணீர், சுகாதாரமற்ற முறையில் உண்ணும் உணவுகள் மூலம் ஏற்படுகிறது, இது "சால்மோனெல்லா டைபை" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், உடல் பலவீனம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை போன்ற உடல் குறிகுணங்களை கொடுக்கும்.

டைபாய்டு நோய் வராமல் தடுக்க, சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும், உணவில் சீரான சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும், நன்கு சமைத்த உணவை உண்ண வேண்டும். டைபாய்டு நோய்க்குரிய தடுப்பூசி போடுவது சிறந்தது.

சுவாச நோய் தொற்றுகள்:

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும்,இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்நோய்களில் தும்மல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, தலைவலி, குளிர் போன்ற குறி குணங்கள் காணப் படும்.நிம்மோனியா காய்ச்சலில் நுரையீரல் தொற்று தீவிரமாக காணப்படும்.

சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். தும்மும் போது அல்லது இருமும் போது வாய் மற்றும் மூக்கை துண்டால் மூடிக் கொள்ள வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், வெளியே சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகச் சுத்தம் செய்து சானிடர் வைத்து துடைக்க வேண்டும். இருக்கும் இடங்களில் சரியான காற்றோட்டத்தை பராமரிக்கவும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். புகைபிடிப்பதை கட்டாயம் தவிர்க்கவும். மற்றும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

லெப்டோஸ்பைரோசிஸ்:

லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று மிகக்குறைவாக அறியப்பட்ட நோய் ,இந்நோயில் உடல் வலி, தலைவலி,தசை சோர்வு,காய்ச்சல் போன்ற தீவிர அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.இந்நோய் விலங்குகளின் சிறுநீர் , இறந்து கிடக்கும் விலங்கு,அல்லது அசுத்தமான தண்ணீருடன் நேரடி தொடர்பு, அசுத்தமான உணவை சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது.

லெப்டோஸ்பைரோசிஸ் தடுக்க, விலங்குகளின் சிறுநீரால் மாசுபடக்கூடிய நீர் அல்லது மண்ணைத் தொடக்கூடாது. தேங்கியுள்ள வெள்ளத்தில் நடப்பதையோ, நீந்துவதையோ தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக நீர் தேங்கியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காலணிகளை அணியவேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும், முக்கியமாக திறந்த காயங்கள் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

உள்நாக்கு அழற்சி:

மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர், மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது,இந்நோயில் தொண்டைவலி, குரல் கம்மல் இவைகளுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன.

உள்நாக்கு அழற்சிக்கான சித்த மருத்துவத் தீர்வுகள் மற்றும் பழக்க வழக்கங்கள்:-

இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்து வரவேண்டும். சூடாக தேநீர், காப்பி அடிக்கடி இந்நேரங்களில் குடிக்கலாம். குடிக்கும்போது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பூண்டுத் தேன்:

பூண்டு சிறிதளவு எடுத்து, அதை இடித்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து லேசாக நெருப்பில் வாட்டிப் பிழிய, அதிலிருந்து சாறு வரும். அதனுடன், சிறிதளவு தேன் கலந்து உள்நாக்கு அழற்சி உள்ள பகுதியில் காலை, இரவு என இருவேளைகளில் தடவி வர, தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். உள்நாக்கு அழற்சியும் குணமடையும். ஆடாதோடை, மிளகு, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு என இருவேளை மென்று சாப்பிடலாம்.

சின்ன வெங்காயத்துடன், நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட உள்நாக்கு அழற்சி வலி மாறும். வெற்றிலை, கிராம்பு, மிளகு இதனுடன் உலர் பழங்கள் அல்லது நாட்டு வெல்லம் வைத்து சாப்பிடலாம். தாளிசாதி வடகம், துளசி வடகம் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தொண்டை சதை அழற்சி நீங்கும்.

கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர தொண்டை சதை வளர்ச்சி நீங்கும். பாலுடன் மஞ்சள், மிளகு கலந்து காலை, இரவு அருந்தலாம். முட்டையை வேகவைத்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்து சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் வைத்து சாப்பிடலாம். நோயற்ற வாழ்வுக்கு வெந்நீரை அருந்த வேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்