டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Update: 2024-09-02 09:27 GMT

கோப்பு படம் 

சென்னை,

குரூப்-1 பதவிகளில் வரும் 16 துணை கலெக்டர்கள், 23 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி கமிஷனர்கள் (வணிகவரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள், 14 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், ஒரு மாவட்ட கல்வி அலுவலர், ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு படை) என மொத்தம் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1 லட்சத்து 25 ஆயிரத்து 726 ஆண்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 501 பெண்கள், 20 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத தகுதியானவர்களாக அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 797 தேர்வு அறைகளில் நடந்து முடிந்தது. முதல் நிலைத் தேர்வை பொறுத்தவரையில், வினாத்தாள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவை விரைவில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து முதன்மைத் தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். அதில் தேர்ச்சி அடையும் தேர்வர்கள் நேர்காணல் தேர்வை எதிர்கொள்வார்கள் 

Tags:    

மேலும் செய்திகள்