என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? - வெளியான அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-07-19 07:37 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 476 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் காலி இடங்கள் இருப்பதாகவும், கடந்த ஆண்டைவிட 22 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ஜினீயரிங் படிப்புகள்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் தகுதியானவர்களாக அவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு எப்போது?

இந்நிலையில், என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் 22-ந்தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர தயாராக உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் இருக்கின்றன? என்பது குறித்த விவரங்கள் கடந்த 15-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்தும், இதுவரை வெளியாகாமல் இருந்தது.

476 கல்லூரிகள்

இந்த நிலையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு எவ்வளவு கல்லூரிகள், எவ்வளவு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தது. அந்த கல்லூரிகளை நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் சில கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டு, அந்த கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்கிறதா? என்பது பின்னர் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூடுதலாக 22 ஆயிரங்கள் இடங்கள்

அந்த வகையில் 476 கல்லூரிகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 காலி இடங்கள் இருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 22 ஆயிரத்து 140 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் உள்ளிட்ட கணினி அறிவியல் என்ஜினீயரிங் சார்ந்த புதிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 22 ஆயிரத்து 248 இடங்களும், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு என்ஜினீயரிங், என்ஜினீயரிங் மற்றும் இளங்கலை வடிவமைப்பு படிப்புகளில் 1,147 இடங்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க சிவில், மெக்கானிக்கல் மற்றும் பிற படிப்புகளில் 2 ஆயிரத்து 965 இடங்களும், கட்டிடக்கலை படிப்புகளில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 இடங்களில் சில குறிப்பிட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் போக, மீதமுள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வரம்பு நீக்கம்

மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) துறை சார்ந்த படிப்புகளில் ஒரு கிளையில் அதிகபட்சமாக 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வரம்பை தற்போது ஏ.ஐ.சி.டி.இ. நீக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்