தீபத்தின் வகைகள்..!

ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

Update: 2024-10-25 07:22 GMT

தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் கலந்த ஒன்று. எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் விளக்கு ஏற்றுவது முக்கிய சம்பிரதாயமாக உள்ளது. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதாக ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன. எனவே தீபம் ஏற்றியதும் 'தீப லட்சுமியே நமோ நம' 'என்று கூறி வணங்குவது அவசியம். இவ்வாறு ஏற்றப்படும் தீபங்களில் பல வகைகள் உண்டு.

சித்ர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம் 'சித்ர தீபம்' ஆகும்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் 'மாலா தீபம்' எனப்படும்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம், 'ஆகாச தீபம்' ஆகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு 'ஜல தீபம்' என்று பெயர்.

படகு தீபம்: கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்க விடுவதற்கு பெயர் 'படகு தீபம்' ஆகும்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை 'சர்வ தீபம்'

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் 'மோட்ச தீபம்' ஆகும்.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது 'சர்வாலய தீபம்' எனப்படும்.

அகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவதற்கு "அகண்ட தீபம்' என்று பெயர்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது 'லட்ச தீபமாகும்.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது 'மாவிளக்கு தீபம்' ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்